Jan 27, 2011

இங்கிவனை யான் பெறவே...

You tube-ல்  ஒரு வீடியோ லிங்க் கிடைத்தது.  அதனுடய விளைவே இந்த போஸ்ட்.

"மாசானாம் மார்கசீர்ஷோ அஹம்"  (மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்) என்று கண்ணனாலும், "மாதங்களில் அவள் மார்கழி" என்று கண்ணதாசனாலும் பெருமை பெற்றது மார்கழி மாதம் (அவதார புருஷனுக்கு பிடிச்ச மாசத்தில தான் நான் பிறந்தது - என்ன கூட 'அவதாரம்' னு தான் சொல்லுவாங்கன்றது வேற விஷயம்).

அப்பாவின் அதிகாலை பூஜை, பார்த்தசாரதி கோவிலில் ஒலிபரப்பும்  MLV யின் திருப்பாவை, தெரு பெண்களின் கோல மீட்டிங் என்று காலை தொடங்கி மாலையில் கச்சேரி, பகல் பத்து / இராப்பத்து என்று அரை இறுதி விடுமுறை இன்பமாய் கழியும்.

தாத்பர்யம் என்ன என்பது தெரியவில்லை, ஆனால் பகல் பத்து என்பது வைகுண்ட ஏகாதசிக்கு முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும், இராப்பத்து என்பது ஏகாதசிக்கு பிந்தைய பத்து நாட்கள் கொண்டாடப்படும்.  அதனால் எப்படியும் மார்கழியில் இந்த உற்சவம் வரும்.  பகல் பத்தில் பார்த்தசாரதி உற்சவர் திருவீதி (மாட வீதி ன்னு சொல்லுவாங்க) உலா வருவார்.  இராப்பத்தில் கோவிலுக்குள்ளேயே உலா வருவார்.   ஒரு ஒரு நாள் ஒரு ஒரு அலங்காரம் - நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்.  காண கண் கோடி வேண்டும்.     நாதஸ்வரக்காரர் டேப் ரிக்கார்டர் மாதிரி திரும்பத் திரும்ப 'எந்தரோ மஹானுபாவுலு', 'அலை பாயுதே', 'வெங்கடாசல நிலயம்', 'பாவமுலோன', 'சாமஜ வர கமனா', 'குறை ஒன்றும் இல்லை' தான் வாசிப்பார் - ஆனால் கேட்டுக்கொண்டே இருக்கலாம், அந்த சூழ்நிலை அப்படி.

உலாவின் இறுதியில் உற்சவர் நாட்டியம் ஆடியபடி மண்டபத்தில் சேவை தருவார். அவர் ஆடும்போது பின்னிசையாக வெஸ்டர்ண் ட்யூனில் நாதஸ்வரம் ஒலிக்கும். ('காடு திறந்தே கிடக்கின்றது' பாட்டில் வருமே ஒரு பிட்) அந்த அனுபவம் சொல்லி விளங்காதது.  அந்நியன் படத்தில் வருவது போல் நரம்பெல்லாம் முறுக்கி மூளையில் ஏதோ ஒன்று ஆகும் - விவரிக்க இயலாத ஓர் உணர்வு.  

மேற்படி நாட்டியம் முடிந்து மண்டபத்தில் எழுந்தருளிய பின் நாம் அந்த திவ்ய மூர்த்தியை மிக அருகில் சென்று தரிசிக்கலாம்.  அப்போது நாதஸ்வரம் 'குறை ஒன்றும் இல்லை' என்று நம் மனதில் இருப்பதை அப்படியே பறை சாற்றும்.

இதோ அந்த வீடியோ.  பச்சை கலரில் ஒரு கதவு பார்ப்பீர்கள் - அந்த வலப்புறக் கதவு பக்கத்தில் நின்றால் அருமையான வ்யூ கிடைக்கும். மறுபடி எப்போது அந்த பாக்கியம் கிட்டுமோ தெரியவில்லை.

 

2 comments: