ரஜினியா, கமலா? (சாரி, நோ பாலிடிக்ஸ்!!), விஜயா, அஜித்தா?...யாரா இருந்தா என்ன, பொழுதுபோக்கா இருந்தா முனீஸ்காந்த் படம் கூடப் பார்ப்பேன். தோனியா.. டெண்டுல்கரா...யாராஇருந்தா என்ன, இந்தியா விளையாடினாலே பார்ப்பேன். ராஜாவா ரஹ்மானா...நேரா மூளை நரம்பைத் தொடும்னா, அனிருத் கூட கேப்பேன். இப்படி பொதுவா எல்லா விஷயத்திலும் இரட்டை நிலையே பெரும்பாலும் இருந்தாலும் அதிலெல்லாம் "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு என்ன" ன்னு இருக்கும் என் போன்றோருக்கு பெரிய decision making challenge என்ன சமைக்கலாம் என்பதில் தான்.
அதிலும் நமக்கு மிகவும் பிடித்த ஒரு பதார்த்தம் என்று இருந்தால் ரொம்ப கஷ்டம். சரி உடனிருப்பவர்களைக் கேட்கலாம் என்றால் அதை விட முட்டாள்தனம் வேறேதும் இல்லை. "எதுவா இருந்தாலும் ஓகே" அல்லது "ஐயோ அது வேண்டாம்" (அந்த 'அது' தான் நமக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்) என்ற இரு விடைகளைத் தவிர வேறு எந்த கருத்தும் நம்மிடம் வந்து சேர்ந்ததில்லை.
இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில், குழந்தைகளுக்குப் பிடித்ததையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், காரமோ, புளிப்போ அவர்கள் விரும்பும் அளவிற்கு மேல் இல்லாதவரை பார்த்துக்கொள்ள வேண்டும், and so on.
இதாகப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருந்தது பூசணிக்காய். எலிக்கு மசால் வடை மாதிரி, பூனைக்குப் பால் மாதிரி எனக்கு பூசணிக்காய். பூஷணி என்றால் 'நிறைந்த' என்று அர்த்தம். (சர்வாலங்கார பூஷணி) அதனால் தான் இந்த காய்க்கு இப்படி ஒரு பேரோ என்று தோன்றும். மணமும் குணமும் நிறைந்த பூசணிக்காயைப் பார்த்ததும் என்னுள் இருக்கும் 'multi-taste-mania' வியாதி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. சாம்பாரா, மோர்க்குழம்பா? இல்லையில்லை, மோர்க்குழம்பா, சாம்பாரா? என்று எனக்குள் ஒரு நீயா நானா சூடு பிடிக்கத் துவங்கியது. ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையில், விடுமுறை நாள் இல்லையென்பதால், சீக்கிரம் வேறு சமைக்க வேண்டிய சூழ்நிலை. என்னை உணவு விஷயத்தில் உரித்து வைத்திருக்கும் (எங்கள் இருவருக்கும் வாழ்க்கையே ருசித்து சாப்பிடத்தான்.) என் மூத்த மகனைக் கேட்டேன். அவன் சட்டென்று 'சாம்பார்' என்று சொல்லிவிட்டு பள்ளிக்குச் சென்று விட்டான்.
ஆகையால் எங்கள் மடப்பள்ளியில் இன்று பூசணிக்காய் சாம்பார். வயிறும் மனமும் நிறைந்தது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா?
ஆனாலும் அந்த மோர்க்குழம்பு...சீக்கிரம் காய் வாங்கச் செல்ல வேண்டும்.
பின் குறிப்பு: Blogம் உயிர்த்தெழுந்து இருக்கிறது...Easter around the corner.
No comments:
Post a Comment