ஆங்கிலத்தில் oxymoron என்று ஒரு சொல் இருக்கிறது. இதற்கு "முரண்பட்ட கருத்து" என்று பொருள் கொள்ளலாம். சமீபத்தில் என்னைக் கவர்ந்த அப்படிப்பட்ட ஒரு விஷயம் திருமதி அருணா சாய்ராமின் இந்த பாடல்.
இப்போதெல்லாம் கச்சேரிகளில் தமிழ்ப்பாட்டு பாடும் முன் அந்த பாடல் கருவை ஒட்டி ஏதாவது ஒரு விருத்தம் பாடுவது கடைப்பிடிக்கப்படுகிறது.
பெரும்பாலும் அருணா சாய்ராம் மற்றும் ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் இந்த ஸ்டைலைக் கடைப்பிடிக்கிறார்கள். (கன்னடப் பாடல்கள் பாடும் வித்யாபூஷணா அவர்கள் பல காலமாக இந்த முறையில் பாடுகிறார்)
இதில் முதலில் பாடிய விருத்தம் வள்ளலார் இயற்றியது. பின்னால் வரும் பாடல் யாருடையது என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டையும் இணைத்துப் பாடிய அருணாவிற்கு ஒரு சபாஷ்!
"உலகில் தாயன்பிற்கு இணையானது என்று ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட தாயே தன் குழந்தையை மறந்தாலும் கூட சிவனே நான் உன்னை மறக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு, அந்த சிவனைப் பார்த்து "உனக்கு ஒரு தாய் தந்தை இருந்தால் இப்படி எல்லாம் அல்லல் நேர்ந்திருக்குமா? எனக் கேட்பது, தெய்வத்தைக் காட்டிலும் பெற்றோரே முதன்மையானவர் என்பதை ரசமாகத் தெரிவிக்கிறது.
ஒரு விஷயத்தை நேரடியாக சொல்வதைக் காட்டிலும் இப்படி ஒரு நயமாக, சுவையாக சொன்னால் நன்றாகத் தான் இருக்கிறது!