December 16, 2012 க்குப் பின் பாலியல் வன்புணர்வுக்கு என்னென்ன காரணிகள் என்று பல கருத்து கந்தசாமிகள் பேசிவிட்டார்கள். அந்த செய்தியை அறிந்தபோது எவ்வளவு வலித்ததோ அதே அளவு இவர்களுடைய கருத்துக்களைக் கேட்டபோதும் வலித்தது. அவ்வப்போது கோபம் கொண்டாலும் எதுவும் மாறப்போவது இல்லை என்று எண்ணிக்கொள்வேன். சில நேரம் கோபம் சிரிப்பாய் கூட மாறும். (முக்கியமாக அசரம் பாபு அவர்களின் கருத்து பற்றி படித்த போது.)
சமீபத்தில் ஒரு நண்பர் பாலியல் விழிப்புணர்வு பற்றி எழுதி இருந்தார். அதில் ஒரு விஷயம் என்னை ஈர்த்தது. பெண்களின் உடை தான் வன்புணர்வுக்கு தூண்டுகிறது என்ற கருத்தில் அவருக்கு உடன்பாடில்லை என்றும் அப்படி இருந்தால் மேலை நாடுகளில் இந்த குற்றம் அதிக அளவில் நடந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
என் குரங்கு மனம் அவ்வப்போது இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும். மேலை நாடுகளிலும் பெண்களைப் பார்த்து கிளர்ச்சியடைகிறார்கள், ஆனால் அது அங்கேயே நிற்கிறது. 3 காரணங்களை வரிசைப்படுத்தத் தோன்றுகிறது. 1. இது இயற்கை என்பதை உணர்கிறார்கள் (பாலியல் கல்வி உதவுகிறதோ என்னமோ?) 2. பெண்களை பெண்களாக, சக மனிதர்களாக மதிக்கிறார்கள், 3. இது குற்றம், சிக்கிக்கொண்டால் விளைவுகள் பெரிய அளவில் இருக்கும் (அங்கே இருக்கிறது) என்பதை அறிந்திருக்கிறார்கள்.
நம் நாட்டில் பெண் இரண்டாம் நிலையிலேயே நிறுத்தப்படுகிறாள். "கேவலம் ஒரு பெண்..." என்று நினைக்காதவர் மிகச்சிலரே. இன்று ஒரு பெண் குட்டைப்பாவாடை அணிந்து சென்றால், அதைப்பார்க்கும் பத்து பேர்களில் எட்டு பேர் (அவளுக்கு சம்பந்தமே இல்லாதவராய் இருந்ததாலும்) "எதுக்கு இவ்வளவு அலட்டல்" என நினைக்கிறார்கள். சிலர் அவளிடம் சொல்லவும் செய்கிறார்கள், கிண்டலாய் கேலியாய், Eve Teasers என்ற ஆங்கில ஆடை மொழியோடு.
எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படி ஒரு முறை நடந்துகொண்டார். அப்போது மாருதி 800 வைத்திருந்த அவர், சான்ட்ரோவில் சர்ரென்று கிளம்பிய ஒரு மேல் தட்டுப் பெண்ணைப் பார்த்துவிட்டு ஏதோ கமெண்ட் அடித்தார். அவருக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்த சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் இருந்தது, அவர்கள் குடி போதையிலும் இருந்து அந்தப் பெண் கொஞ்சம் ரியாக்ட் செய்தால் ஏதோ ஒரு விதத்தில் அவளை பந்தாடுவார்கள். அவரவருடைய தன்மையைப் பொருத்து அது groping, molesting etc விலிருந்து வன்புணர்வு வரை போகிறது.
இளைஞர்களின் இல்லையில்லை ஆண்களின் இந்த மனப்போக்கிற்கு வளர்ப்பு முறை, நட்பு மற்றும் சினிமா பெரிதளவில் காரணமாக இருக்கின்றன. இப்போதைய திரைப்படங்களில் பெண்களை கேலி செய்யும் வசனங்களும், அவர்களின் உடலமைப்பை குறிக்கும் படியான பாடல்களும் அப்படிப்பட்ட பாடல்கள் படமாக்கப்படும் விதமும் பாமர மனிதனை, அவற்றைத் தனக்குத் தெரிந்த பெண்ணிடம் உபயோகப்படுத்த உந்துகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக "விச்வாமித்ரரின் தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகையை அனுப்பினான்" என்று அங்கும் பெண்ணை ஒரு போதைப்பொருளாகவே பார்த்திருக்கிறார்கள். இதை அறிபவன், இது காவியம் என்றோ வரலாறு என்றோ பாராமல் "பெண் ஒரு போதைப்பொருள்" என்று மட்டும் எடுத்துக்கொள்கிறான்.
சரி - இதை சரி செய்ய முடியுமா? மதுவிலக்கு, ஆண் பிள்ளைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தன் சிந்தனை, சொல், செயல் வழியாக போதிக்கும் பெற்றோர், பெண்ணை பெண்ணாக, சக மனிதப் பிறவியாக பார்த்தல், தவறான கருத்தையோ, சொல்லையோ பேசமாட்டேன்/எழுதமாட்டேன்/பாடமாட்டேன் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தல், குற்றம் புரிபவருக்கு வயது வரம்பின்றி மரண தண்டனை அளித்தல்.
எண்ணிப்பார்த்தாலே இனிக்கிறது. கலியும் முற்றிக்கொண்டிருக்கிறது.
பி.கு: பாரதியாருக்கு ஒரு நமஸ்காரம்.