"எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்"
- பாரதியார்.
ஒரு மூதாட்டி பால பருவத்திலிருக்கும் தன் பேரனுடன் வசித்து வருகிறாள். அவளுக்கு இறை பக்தி அதிகம். பேரனுக்கு உரிய வயது வந்ததும் குரு குலத்திற்கு அனுப்புகிறாள். சிறுவன் குருவின் இல்லம் செல்ல காட்டுப்பகுதியைக் கடக்கவேண்டும். "எனக்கு பயமாய் இருக்கு பாட்டி" என்ற அவனிடம் "கவலைப்படாதே, நீ போகும்போது ரங்கனைக் கூப்பிடு, துணைக்கு வருவான்" என்றாள்.
காலை புலர்ந்தது. சிறுவன் புறப்பட்டான். காட்டின் தொடக்கத்தில் "ரங்கா!" என்றான். "இதோ வந்தேன்" என்று அவன் வயதொத்த ஒரு சிறுவன் வந்தான். இருவரும் சேர்ந்தே போனர். காட்டின் எல்லையில் ரங்கன் விடை பெற்றான்.
"மாலையும் வருவாயா ரங்கா?"
"நிச்சயம் வருவேன்"
தினமும் இது தொடர்ந்தது. குருகுலம் முடியும் நேரமும் வந்தது. எல்லா மாணவர்களும் குரு தட்சணை பற்றி பேச சிறுவனை கவலை தொற்றிக் கொண்டது.
"பாட்டி! என் குருவிற்கு காணிக்கையாக என்ன கொடுப்பது?"
"ரங்கனைக் கேள் கண்ணா, அவன் உதவுவான்" என்றாள்.
"அட! இவ்வளவு தானா? நான் கொண்டு வருகிறேன்" என்றான் ரங்கன்.
மறுநாள் ஒரு சொம்பில் பால் கொண்டு வந்து தருகிறான். சிறுவன் குருவின் இல்லம் சென்று தன் காணிக்கையை சமர்ப்பித்தான். குரு பூஜையை ஆரம்பித்து, மாணவர்கள் எடுத்து வந்தவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார். பாலாபிஷேகம் செய்யும்போது எல்லா சொம்புகளும் காலியான நிலையில் ஒரு சொம்பில் மட்டும் பால் அப்படியே இருக்க, அதை எடுத்து அபிஷேகம் செய்ய, மீண்டும் மீண்டும் சொம்பு பாலால் நிறைந்தது. ஆச்சரியம் மேலிட, "இது யார் கொண்டு வந்தது?" என வினவினார்.
பயந்து போன சிறுவன், "ரங்கன் தான் கொடுத்தான், என்க்கொன்றும் தெரியாது" என்றான்.
"யார் அந்த ரங்கன்?" என்றார் குரு.
"என் பாட்டி தான் சொன்னாள், அவன் தினமும் எனக்கு துணையாக வருவான் என்று", சொன்னான் சிறுவன்.
"சரி வா, அவனைப் பார்ப்போம்" என்ற குருவுடன் எல்லோரும் கிளம்பினர்.
காட்டின் எல்லையில் சிறுவன் எவ்வளவு கூப்பிட்டும் ரங்கன் வரவில்லை. அந்த நேரம் அசரீரி ஒலித்தது. "மூதாட்டியின் பக்தியை மெச்சவே இந்த நாடகம், எல்லோருக்கும் நான் தெரிவதில்லை".
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி என்னுள்ளும் அவ்வப்போது எழும். இருக்கிறாரோ இல்லையோ, இருக்கிறார் என்று நம்பினால் நன்மைகளே அதிகம் (போலி சாமியார்களிடம் செல்லாத வரையில்). தர்மத்தின் பாதையில் செல்லவும், தீய வழியில் செல்லாமலிருக்கவும் இறை உணர்வு உதவும். நான் சொல்ல வருவது ஒரு நாத்திகன் அதர்மவாதி என்றோ தீயவன் என்றோ அல்ல. "God fearing" என்று தானே சொல்கிறோம்? அதை நான் புரிந்து கொண்ட வரையில் சொல்ல முற்பட்டேன்.
இந்த கதை என் அம்மா எனக்கு சிறு வயதில் சொன்னது. அந்த வயதில் கதை கேட்டபோது, ரங்கனையும், சிறுவனையும் நான் மனக்கண்ணால் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. இது போன்ற பல கதைகளை சொல்லி ஒரு குழந்தையின் மனதில் இறை நாட்டத்தை ஏற்படுத்த முற்படுவது, பெற்றோரின் கடமைகளில் ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து.