என்னுடைய நண்பர்கள் சிலர் ஓர்குட்-இல், நடக்க இருக்கும் தமிழ் மாநாட்டிற்காக இயற்றப்பட்ட பாடல் வீடியோ வை upload செய்து இருந்தார்கள். அந்த வீடியோ முடியும்போது அது மூத்த தமிழ் தலைவர் முதல்வர் மு.கருணாநிதி இயற்றியது என போடப்பட்டு இருந்தது.
முதலில் வீடியோ பார்த்த போது பாடல் வரிகள் புரியவே இல்லை. பாடகர்கள் வார்த்தைகளை வெளியில் விடவே இல்லை...சொற்குற்றமோ பொருள் குற்றமோ (புரிந்தால் தானே சொல்ல முடியும்?) இல்லை...நிறைய உச்சரிப்பு பிழைகள். முதலில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதை Oscar புகழ் ஏ ஆர் ரஹ்மான் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று பாடுகிறார்.
பின் பாதியில் western style-இல் இரண்டு பேர் தமிழை கடித்து துப்பி இருக்கிறார்கள்.
கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாலும்
என்ற இரண்டு வரிகள் காலை எழுந்தவுடன் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
இந்த வீடியோ பதிவு "phir mile sur" என்ற தேசிய ஒருமைப்பாட்டை நினைவு படுத்தும் பதிவை விட நன்றாக இருப்பதாக சில விமர்சனங்கள் படித்தேன். உண்மை தான் - ஆனால், இன்னும் பல மடங்கு நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பாடல் பதிவை பொறுத்த வரையில் உச்சரிப்புக்கு முக்யத்துவம் கொடுத்திருக்க வேண்டும் - எப்படி பாடலாசிரியர் இந்த பிழைகளை பொறுக்கிறார் என்று புரியவில்லை; "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று சொன்ன நக்கீரனின் மொழி இன்று ஒரு ஆஸ்கார்-இன் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கின்றதா?
திரை வடிவாக்கம் யாருடைய சிந்தனை என்று தெரியவில்லை. தமிழை இயற்தமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்று தானே பிரிக்கிறோம்? பாடலும் மொத்தமாக தமிழ்-இன் அருமை பெருமைகளைத்தான் குறிப்பதாக தெரிகிறது (எனக்கு புரிந்த வரையில்) பின் ஏன் இசைத்தமிழை ஒட்டி இசைக்கலைஞர்களை மட்டுமே பதித்திருக்கிறார்கள்? வள்ளுவர் ஒரு நொடி வந்து போகிறார். "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே" என்ற பாரதியும் காணவில்லை, "தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்ற பாரதிதாசனையும் காணவில்லை. சரி ஏதோ சாலமன் பாப்பையா, சாரதா நம்பிஆரூரன்,விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்,புழ்பவனம் குப்புசாமி போன்ற மக்கள் கூட தென்படவில்லை. ஒரே ஆறுதல் சில கிராமிய கலைஞர்கள் இருப்பது தான்.
தமிழ் எனது தாய்மொழி இல்லை, இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த மொழிகளில் ஒன்று, என் தாய்மொழியை விடவும் எனக்கு தமிழ் மிகவும் பரிச்சயமான ஒன்று. ஆயினும், இது வரையில் ஒரு ஐந்து அல்லது ஆறு முறை இந்த பாடலை கேட்டுவிட்டேன், ஒரு கோர்வையாக பாடல் வரிகள் மனதில் நிற்கவில்லை,செவிக்கு எட்டும் வரிகள் மூளைக்கு எட்டவில்லை. அது பாடல் மற்றும் இசையமைப்பின் பிழையா அல்லது எனது திறமையின்மையா என்று தெரியவில்லை. உங்களில் யாருக்காவது புரிந்தால் எனக்கு விளக்குங்கள் ப்ளீஸ்...